"என் புத்தகங்களை வெளியிட்டிருக்கிறீர்கள்,எனக்கு ராயல்டியாக ஒரு லட்சம் நீங்கள் கொடுக்கவேண்டும். வீட்டிற்கு மூன்று மாத வாடகை அட்வான்சாக கொடுக்கவேண்டும் என்றார்"
"நீங்கள் எந்த அடிப்படையில் கணக்குப்போட்டு ஒரு லட்சம் கேட்கிறீர்கள் என்பது எனக்குத் தெரியவில்லை. நீங்கள்தான் சொன்னீர்கள் எனக்கு ராயல்டி வேண்டாம் என்று" - நான்
"எனக்கு இப்போது பணம் வேண்டும் அவ்வளவுதான்" - சி.சு.செ
"உங்கள் புத்தகங்களுக்கு எவ்வளவு ராயல்டி சேரவேண்டும் என்பதைச் சொல்கிறேன் - ஏழு நாட்கள் அவகாசம் தாருங்கள். ஒன்றுமட்டும் நிச்சயம். ஒரு லட்சம் என்பது முடியவே முடியாது" என்று சொன்னதும், அவர் கோபத்துடன் வீட்டைவிட்டு வெளியேறிவிட்டார். இரண்டுநாள் கழித்து ரூபா எட்டாயிரமோ என்னவோ கணக்கிட்டுஅவர் வீட்டுக் கொண்டுபோய்க் கொடுத்துவிட்டேன். எப்படி எட்டாயிரம் வந்தது என்பதை இரண்டு முழு நீளக் காகிதத்தில் கணக்கு எழுதிக் கொடுத்தேன். எனக்கு அவர் அன்று நடந்துகொண்டதுதான் அதிர்ச்சி தந்தது. கிட்டத்தட்ட முப்பதாண்டுகள் நட்பு. !
மௌனி என்னுடன் நடந்து கொண்டதை ஒப்பிட்டுப் பார்த்தேன். ஏதோ ஒரு எண்ணத்தினால்தான் நான் எழுதியவைகளை நானே வெளியிடாமல் இருந்தேன். அப்போதே நான் எழுதிவைத்திருந்தவை ஏராளமாக இருந்தன. அந்த அனுபவத்தினால் ஏற்பட்ட கசப்பினால் நான் மொழிபெயர்த்து வைத்திருந்த சாமுவேல் பெக்கட் இன் கோடாவிற்காக காத்திருத்தல் என்ற புத்தகத்தை வெளியிட்டேன். பின்பு "சித்திரா", "பனிமலைப் பிரதேசத்துக் கதைகள்" வெளியிட்டேன். நான் எழுதிவைகளை வெளியிடுவதில் எனக்கு ஏனோ ஆர்வம் கிடையாது. வெளிவந்த என் கட்டுரைகளையும், மதிப்புரைகளையும் தொகுத்து புத்தகமாகக் கொண்டுவருவதிலும் எனக்கு அக்கறை இல்லை. சுயவிளம்பரம் என்னால் செய்யமுடியாது. ஆனால் நான் எழுதியவைகளை மற்றவர்கள் வெளியிட்டனர். "அம்மாவின் அத்தை", "உயிரியக்கம்" என்ற என் சிறுகதைத் தொகுப்புக்களை வசந்தகுமார் தமிழினி வெளியீடுகளாக அவரே விரும்பிக் கொண்டுவந்தார். "சிறைக்கடிதங்கள்", "பழங்காலத்துக் கல்வீடு" மொழிபெயர்ப்பு நாடகங்களை வைகறை வெளியிட்டார். "அழகியல் ஓர் அறிமுகம்" என்ற நூலையும், நான் தொகுத்துக் கொடுத்த நடை, இலக்கியவட்டம் தொகுப்புக்களையும் சந்தியா பதிப்பகம் வெளியிட்டது.
எழுத்துலகில் நான் உதவி செய்தவர்களே எனக்குப் பொல்லாங்கு செய்தார்கள். அதைப்பற்றி இம்மியளவும் எனக்குக் கவலை இல்லை. ஏனென்றால் நான் இம்மியளவுகூட உதவி செய்யாதவர்கள் என்னை மதித்தார்கள். உதவி செய்தனர். வாழ்க்கையில் நன்மை செய்தவர்களை நினைத்துக்கொண்டே இருந்தால்தான் மகிழ்ச்சியாக இருக்கும். மகிழ்ச்சியுள்ள மனதுதான் இளமையாக இருக்கமுடியும். வாழ்க்கையில் கூட்டல்களைக் கூட்டினால்தான் பெருக்கல் கிடைக்கும். கழித்தல்களைக் கழித்துவிட வேண்டும். என் ஐம்பதாண்டு காலத்தில் நான் எழுதி, வெளியிடவிரும்பாத கையெழுத்துப்பிரதிகளாகவே இருப்பவை ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்கங்களில் கிடக்கின்றன. மௌனி, தருமூ சீவாராமு, சுந்தரராமசாமி, வெ.சாமிநாதன் எனக்கு எழுதிய கடிதங்கள், கருத்தரங்குகளில் படித்த கட்டுரைகள், என் நாட்குறிப்புகள், மொழிபெயர்ப்புக்கள், இன்னபிற ஏராளமாக இருக்கிருக்கின்றன. இவற்றையெல்லாம் தற்செயலாகப் பார்த்த கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் வெளியிடுவோமென்று வற்புறுத்திக்கொண்டேயிருந்தார். அவர் என்னை வெளியில் பார்க்கும்போதெல்லாம் செய்த தொந்தரவு பொறுக்கமுடியாமல், நான் தாஸ்த்தோவோஸ்கியின் "கர்மசோவ் சதோதரர்கள்" நாவலை தமிழாக்க்கம் செய்து வைத்திருந்த இரண்டாயிரம் பக்கங்களைக் கொடுத்தேன். படித்துவிட்டுட்டுத் திருப்பிக் கொடுங்கள் என்றுதான் கொடுத்தேன். "கர்மசோவ் சகோதரர்கள்" மொழிபெயர்ப்பைக் கொடுத்ததை மறந்துவிட்டேன். ஐந்தாண்டுகளுக்கு முன் கொடுத்திருந்தேன். என் வீட்டுக்கு அடிக்கடி வருவார் , பேசுவார். அன்றொருநாள் ஒரு பையை எடுத்துக்கொண்டு வந்தார். இதைப் பார்த்துவிட்டுக் கொடுங்கள் என்று பையில் இருந்து ஒரு பெரிய காகிதக் கட்டைக் கொடுத்தார். அப்படியே வாங்கி பக்கத்தில் வைத்துக்கொண்டேன். பேசத்தொடங்கினேன்.
"என்ன ஐயா அந்தக் காகித்தங்களைப் பிரித்துத்தான் பாருங்களேன்" என்றார்.
பிரித்துப் பார்த்தேன். கர்மசோவ் சகோதரர்கள் - 1200 பக்கங்களில் அச்சடிப்பதற்காக தட்டச்சு செய்திருக்கிறார். அதற்காக நிறையவே செலவு செய்துவிட்டிருக்கிறார். வெளியிடவேண்டாம் என்று சொல்லுவது எனக்கு நியாயமாகப் படவில்லை. இது மூன்றாணடுகளுக்கு முன்பே வரவேண்டியது. இது வெளிவர தாமதமாவதற்கு நான்தான் காரணம். நான் எழுதியவைகள் புத்தகமாக வெளிவருவதில் எனக்கு உற்சாகம் கிடையாது. என் புத்தங்களை விற்பனை செய்வது கடினம்.
அது விரைவில் வெளிவரும்.
சரி என்னதான் செய்வது என்னிடம் சேர்ந்து கிடக்கும் நான் எழுதியவைகளை?
காலஞ்சென்ற சாரதா மாலதி உட்பட நண்பர்கள் வற்புறுத்தியதால்தான் இந்த இணையதளத்தை தொடங்கியுள்ளேன்.
ஆக மஞ்சுவந்தத்தில் நான் எழுதியவைகள் மட்டுமே வெளிவரும். ஒரு தனிமனிதனின் ஒலிபெருக்கியாக மட்டுமே மஞ்சுவந்தம் இருக்கும். அவைகளை எந்தத் தலைப்புகளில் வெளியிடலாம் என்று சிந்தித்தபோது தோன்றியவைகள் பின்வருமாறு,
தலையங்கம், கட்டுரைகள், சிறுகதை, நாட்குறிப்பு, மொழி பெயர்ப்பு, எண்ணங்கள், அநுபவங்கள், பயணங்கள், கடிதங்கள், பேட்டிகள், உரையாடல்கள், மெய்யியல், நாவல்,வாழ்க்கை வரலாறு, மொழி பெயர்ப்பு நூல்கள், நிறைவேறாத ஆய்வுத் திட்டங்கள், கனவுகள், மேற்கோள்கள்.
மஞ்சுவந்தம் இந்தச் சொல்லின் பொருள்
இமய மலைக்கு உத்திரத் திசையில் உள்ள ஒரு மலை, இதில் மிகப்பெரிய தடாகம் ஒன்று உண்டு. அதில் பஞ்சவர்ணங்களோடு கூடிய தாமரை மலர்கள் மலர்வன.- மதுரைத் தமிழ்ப் பேரகராதி இரண்டாம் பாகம் - பக்கம் 347
எனக்கு பயணம் செய்வது மிகவும் பிடிக்கும். எனக்குப் பணம் கிடைக்கும்போதெல்லாம் , ஓடோடிச் செல்லும் இடம் இமயமலைத் தொடர்தான். இந்தச் சிகரத்தை நான் காணுவதற்காக நன் பட்ட பாடுகளை பயணக்குறிப்புகளில் வெளியிடுவேன்.