Saturday, May 15, 2010

மரங்கள்

முப்பதாண்டுகளுக்கு முன்பு நான் வாழும் இடத்தில் மரங்கள் ஏராளமாக இருந்தன. ஒரு மரம் இன்னொன்றைப்போல் இருக்காது. உங்களுக்கு மன அமைதி வேண்டுமானால் எந்த ஒரு மரத்தையாவது உற்றுப் பாருங்கள், அதன் அடிமரம், அதன் கிளைகள், அதன் இலைகள் - அது பூக்கும் மரமாக இருந்தால் அதன் மலர்கள்! கிளைகளினூடே சூரியனின் ஒளிக்கதிர்கள் வரும் அழகு! உள்ளே புகுந்து போகும் காற்று, மரங்களை உற்றுப் பார்ப்பதே அது ஒரு வகைத் தியானம். நான் இருக்கும் வீட்டின் அருகே விளையாட்டுத் திடல் இருக்கிறது. அதன் ஓரங்களில் எத்தனையோ மரங்கள் இருக்கின்றன, அவை புயலால் அழிக்கப்படுவதற்கு மேலாக மனிதனால் அழிக்கப்படுவதுதான் அதிகம். இப்போது களை இழந்து கிடக்கிறது. அந்த மைதானத்தின் அக்கம் பக்கத்தில் வீடுகள் இருக்கின்றன. ஒரு வீட்டின் முன்னால் ஒரு நாகலிங்க மரம் இருந்தது, அது பழங்காலத்து வீடு. அநேகமாக இந்த இடத்தில் முதன் முதலாக கட்டப்பட்ட வீடு அதுதான். அதைக் கட்டியவர் சென்னைப் பட்டணத்திற்கு நூறு மைல் தூரத்தில் இருக்கும் நெல்லூரில் இருந்து வந்தவர். அவரை நான் முதன்முதலாகப் பார்த்தபோதே ஐம்பது வயதைத் தாண்டியிருந்தார். அவருடன் நெருங்கிப் பழகாவிட்டாலும் அவ்வப்போது வீட்டிற்கு முன்பு நின்று இருக்கும்போது பேசுவேன். அவருடன் நான் பேசுவதற்குக் காரணமே அந்த நாகலிங்க மரம் தான்.



ஒரு நாள் அவர் வீட்டின் சுற்றுச் சுவருக்கு வெளியே நடைபாதையில் விழுந்து கிடந்த நாகலிங்க பூக்களைப் பொறுக்கிக்கொண்டிருந்தேன். அப்போது அவர் என்னை தற்செயலாகப் பார்த்து, என்னை உள்ளே வரும்படி அழைத்து, வாடாத மலர்களாக எவ்வளவு வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளும்படி சொன்னார். அப்போதிலிருந்துதான் நான் அவருடன் பழகத் தொடங்கினேன். அவர் அந்த வீட்டில் மாதத்தில் சிலநாட்கள் மட்டுமே தங்குவார். அவரை அந்த வீட்டில் குடும்பத்தோடு பார்த்ததில்லை. எப்போதாவது ஒரு வயதான அம்மாள் காணப்படுவார். அவர் யார் என்பதும் எனக்குத் தெரியாது. அவர் வீட்டின் பின்புறத்தில் காவலர்கள் குடியிருந்தார்கள். நான் சென்னையில் இருக்கும்போது அந்த நாகலிங்க மரத்தை ஒருநாளும் பார்க்காமல் இருக்கமாட்டேன். எனக்கு சமிக்க்ஷா கோவிந்தன் நட்பு ஏற்பட்டு அவருடன் இரவு பத்தோ பதினொன்றோ மணிவரை பேசிவிட்டு வீடு திரும்புவேன். அந்த சமயத்தில் இப்போதுபோல் அல்லாமல் அமைதியாக இருக்கும். என் வீட்டிற்கு இந்த நாகலிங்க மரத்தை தாண்டித்தான் போகவேண்டும். அந்த நாகலிங்க மரம் நிலாக் காலத்தில் என்னமாய் அழகாக இருக்கும். அது வெறும் மரமாக இல்லை.நளினமாக இருந்தது. சில நாட்களில் காலை மூன்று மணிக்கே விழிப்பு வந்துவிட்டால், என் வீட்டுத் தெருக்கதவை மூடிவிட்டு நாகலிங்க மரத்தை நோக்கி நடப்பேன். பத்தோ பதினைந்தோ நிமிட நடை, அதை நெருங்க நெருங்க அதன் மணம் ! நான் வெளியூர்களில் இருக்கும்போது, நான் விழித்திடும்போது கண் எதிரே தெரியும். உறங்கும்போது என் கனவில் வரும். நான் நாகலிங்க மரத்துடன் கொண்ட நட்பு எவருக்கும் சொல்லிப் புரியாது. நான் சோர்ந்து போன வேளைகளில், கவலைப்பட்ட சமயங்களில், என்பக்கத்தில் நெருங்கி நின்ற நண்பனாய் இருந்தது. அந்த வீடு ஓராண்டுக்கு மேலாக பூட்டிக் கிடந்தது, அந்த நாகலிங்க மரத்தின் அடியில் அதன் சருகுகள் மண்டிக் கிடந்தன. குவியில் குவியலாக பூக்கள் சிதறிக் கிடந்தன. நான் அதைப் பார்க்காமல் இருக்கமாட்டேன். அந்த வீட்டுக்காரர் என்ன ஆனார் என்பது தெரியவில்லை. நான் வெளியூருக்குப் போய் பதினைந்து நாட்களில் சென்னை திரும்பினேன். ரெயிலில் பயணம் செய்த களைப்பினால் இரண்டு நாட்கள் வீட்டை விட்டு வெளியே கிளம்பவில்லை. இரவு பத்து மணியிருக்கும், அன்று பௌர்ணமி, நாகலிங்க மரத்தைப் பார்க்கலாம் என்று போனேன். தெருமுனையில் இருந்தபடியே நாகலிங்க மரம் தெரியும். தூரத்தில் இருந்தே தெரிந்துவிட்டது அங்கு நெடுந்தோங்கியிருந்த நாகலிங்க மரம் காணோம். நான் விரைவாக நடந்தேன். நாகலிங்க மரம் வெட்டப்பட்டுவிட்டது. அந்த வீட்டையும் பாதி இடித்துவிட்டிருந்தார்கள். எனக்கு அழவேண்டும் போல் இருந்தது. மிகுந்த துயரத்துடன் என் வீட்டிற்குத் திரும்பினேன். படியில் வெகுநேரம் மௌனமாக உட்கார்ந்திருந்தேன். என் கவலைக்கு, தெரிந்த முழுநிலா பார்ப்பதற்கே வருத்தமாக இருந்தது. எவ்வளவு நேரம் அப்படி உட்கார்ந்து இருந்தேனோ தெரியாது.






என்றோ எர்மன் ஹோர்ஸே எழுதிய "மரங்கள்" என்ற வசனக் கவிதை நினைவுக்கு வந்தது. என் நாகலிங்கம் இறந்து போனதை மறக்க அந்த வசன கவிதையை தமிழாக்கம் செய்தேன். தமிழாக்கம் முடிந்தபின்தான் என் மனத்துயரை ஆற்ற முடிந்தது.



மரங்கள்



எனக்கு மரங்கள் எப்போதுமே மனதின் ஆழத்திற்குச் செல்லும் போதனைகள் சொல்லுபவை. அவை தம் குலங்களோடும், குடும்பங்களோடும் காட்டிலும் தோப்புகளிலும் வாழும்பொழுது அவற்றை நான் வணங்கிப் போற்றுவேன். அவை தன்னந்தனியாக நிற்கும்போது வணங்கிப் போற்றுவேன். அவை தனிமையில் இருக்கும் மனிதர்களைப் போன்றவை. ஏதோ பலவீனத்தால் வாழ்கையில் இருந்து திருட்டுத்தனமாக ஓடிவந்துவிட்டு சன்னியாசிகளைப்போல் அல்லாமல் தனிமை விரும்பிகளாகயிருந்த மாபெரும் மனிதர்களான பீத்தோவான், நீட்சே போன்றவை. அவைகளின் மிக உயர்ந்த கிளைகளில் இந்த உலகம் சலசலக்கிறது. அவைகளின் வேர்கள் முடிவில்லா காலத்தில் இருக்கின்றன. ஆனாலும் அவை தங்களை இழந்துவிடவில்லை. அவை தம்மிடமுள்ள எல்லா சக்திகளையும் ஒன்றுதிரட்டி ஒன்றே ஒன்றிற்காகப் போராடுகின்றன. அதாவது தங்களுக்கென்றே இருக்கின்ற விதிகளின்படி நிறைவுடமை செய்வதற்கு தங்களுக்கேயுரிய வடிவத்தைக் கட்டமைத்துக் கொள்ளவும், தங்களுக்குத் தாங்களே பிரதிநிதிகளாக இருக்கவும்,



எதுவுமே புனிதம் அன்று, எதுவும் எடுத்துக்காட்டாவும் அன்று ஓர் அழகான வலுவான மரத்தைவிட. ஒரு மரமானது வெட்டி வீழ்த்தப்பட்டிருக்கிறது. அது தன் மரணத்தின் காயத்தை சூரிய ஒளியில் காட்டுகிறது. ஒருவன் அதன் முழு வரலாற்றையும், அதன் பிரகாசிக்கும் எழுத்து செதுக்கப்பட்டிருக்கும் அடிமரத்தின் வட்டத்தில் படிக்கலாம் - அதில் இருக்கும் ஆண்டுகளின் வளையங்கள், அதன் காய வடுக்கள், அதன் அனைத்து போராட்டத்தையும், அதன் அனைத்து துயரங்களையும், அதன் அனைத்து நோய்களையும், அதன் அனைத்து இன்பங்களையும் வளமைகளையும் - எல்லாமே உண்மையாகவே எழுதப்பட்டுள்ளன. அதை வாட்டி எடுத்த ஆண்டுகளையும் செழித்துக் கொழித்த ஆண்டுகளையும், தாக்குதல்களையும் சமாளித்து நிமிர்ந்து நின்றதையும், சூறாவளிகளுக்கு சாய்ந்துவிடாமல் பொறுமை காத்ததையும் அறியலாம். ஒவ்வொரு இளம் பண்ணைப் பையனும் அறிவான் கெட்டியான உன்னதமான மரம் குறுகிய இடைவெளியை உடைய வளையங்கள் கொண்டது என்பதை. மலைகளின் உச்சிகளிலும் தொடர்ந்து அபாயத்தில் இருக்கும் மரங்கள்தான், அழிக்க முடியாத பெரு வலிமைகொண்ட, குறிக்கோள் கொண்டவையாக நிலையானவைகளாக வளர்வன.



மரங்கள் புனிதமான வழிபாட்டிடங்கள். அவைகளுடன் எப்படிப் பேசவேண்டும் என்று அறிந்தவர்கள்தான், அவைகள் பேசுவதை உற்றுக் கேட்க அறிந்தவர்கள்தான் உண்மையைக் கற்றுக்கொள்ள முடியும். அவைகள் கற்பதையும் நல் ஒழுக்கங்களையும் போதிக்கவில்லை. அவைகள் விபரங்களால் தடைப்படுத்தப்படாமல் வாழ்க்கையின் தொன்மையான சட்டத்தைப் போதிக்கின்றன.



ஒரு மரம் சொல்கிறது : என்னுள் கருமூலப் பகுதியான கொட்டைப் பருப்பு ஓர் ஒளிப்பொறி, ஒரு சிந்தனை மறைத்து வைக்கப்பட்டிருக்கிறது. நான் முடிவிலா இருத்தலில் இருந்து வந்த வாழ்வு. என்னை மரணமிலா அன்னையானவள் எடுத்துக் கொண்ட முயற்சியும் இடர்பாடும் தன்னேர்ரில்லாதவை. வடிவமும் என் தோலின் குருதிக் குழாய்களும் தன்னேரில்லாதவை : என் கிளைகளில் இருக்கும் சின்னஞ்சிறு விளையாட்டும் தன்னேரில்லாதவை : என் பட்டையின் மேல் இருக்கும் சின்னஞ்சிறிய வடுவும் தன்னேரில்லாதவை : என் உடலின் மிகச் சிறிய பாகத்திலும் ஆதியும் அந்தமுமில்லாத அந்த ஒன்றிற்கே வடிவம் கொடுத்து அதை வெளிக் கொணர்வதற்கே ஆக்க பட்டிருக்கிறேன்.



ஒரு மரம் சொல்கிறது : நம்பிக்கையே என் வலிமை. என் தந்தையார்களைப் பற்றி நான் ஒன்றும் அறியேன். ஒவ்வொரு வசந்த பருவத்திலும் என்னிடம் இருந்து ஆயிரக்கணக்கில் வெளிவரும் அந்தக் குழந்தைகளைப்பற்றியும் அறியேன். என் விதையின் ரகசியத்தை அதன் இறுதிக்காலம் வரை பிழைத்திருக்கும்படி வாழ்கிறேன். நான் எதைப் பற்றியும் கவலைப்படுவதும் கிடையாது. நான் நம்புகிறேன் என்னுள் கடவுள் இருக்கிறார் என்று. நான் நம்புகிறேன் என் உழைப்பு புனிதமானது. இந்த நம்பிக்கையினால் நான் வாழ்ந்துகொண்டிருக்கிறேன்.



நாம் துன்பப்பட்டு நம்மால் வாழ்க்கையை இனியும் தாங்கிக்கொள்ள முடியாதபோது, ஒரு மரம் நமக்கு ஏதோ ஒன்றை சொல்ல இருக்கிறது. அமைதியாக இரு ! அமைதியாக இரு ! என்னைப் பார் ! வாழ்க்கை என்பது சுலபமானது அல்ல, வாழ்க்கை கடினமானதும் அல்ல. இவை எல்லாமே சிறுபிள்ளைத்தனமான சிந்தனைகள். உன்னிடத்தில் இருக்கும் கடவுள் பேசட்டும் : உன் சிந்தனைகள் அமைதியாக வளரும். நீ கவலைப்பட்டுக்கொண்டிருக்கிறாய் ஏனெனில் உன் பாதை அன்னையிடமிருந்தும், வீட்டில் இருந்தும் விலகி எட்டப்போய்விட்டது. ஆனால் ஒவ்வொரு காலடியும் ஒவ்வொரு நாளும் உன்னை மீ்ன்டும் அன்னைக்கே அழைத்துச் செல்வன. வீடு என்பது இங்கேயுமில்லை ; அங்கேயுமில்லை. வீடு உன் உள்ளுக்குள்ளே இருக்கிறது. அல்லது எங்குமே வீடு இல்லை.


மாலை நேரத்தில் மரங்கள் சல சலப்பதை நான் கேட்கும்போது, சுற்றித் திரிவதற்கான ஏக்கம் என் இதயத்தைப் பிளக்கிறது. ஒருவன் அவைகளை நீண்ட நேரத்திற்கு உற்றுக் கேட்பானாயின் இந்த ஏக்கமே அதன் கருமூலமான கொட்டப்பருப்பபை - அதன் அர்த்தத்தை வெளிக்காட்டும். இது என்னவோ ஒருவன் தன் துயரத்தில் இருந்து தப்புவதற்கான விவகாரம் அல்ல. அப்படியாக அது தோன்றினாலும், அது வீட்டிற்கான அந்த அன்னையின் ஞாபகத்திற்காக, வாழ்க்கைக்கு புதிய உருவகங்களுக்கான ஏக்கம் அது வீட்டிற்கு அழைத்துக்கொண்டு போகிறது. ஒவ்வொரு பாதையும் வீட்டிற்கு அழைத்துச் செல்கிறது. ஒவ்வொரு காலடியும் பிறப்பாகும் ; ஒவ்வொரு காலடியும் இறப்பாகும் ; ஒவ்வொரு கல்லறையும் அன்னையாகும்.



எனவே மாலை நேரத்தில் மரமானது சல சலக்கிறது, நாம் நம் சிறுபிள்ளைத்தனமான சிந்தனைக்கு முன் நின்று சங்கடப்பட்டுக் கொண்டிருக்கும்போது. மரங்கள் நீண்ட சிந்தனைகளைக் கொண்டிருப்பவை நம்மைவிட அதிமான நீண்ட காலம் வாழ்கின்றன. அவை நம்மைவிட விவேகமானவை, எவ்வளவுகாலம் நாம் அவைகளை நாம் உற்றுக் கேட்காதிருக்கும் வரை. நாம் மரங்களை உற்றுக் கேட்க கற்றுவிட்டோமானால் அப்போது நம் சிந்தனைகளின் குழந்தைத்தனமான பரபரப்பும், செறிவும், உணர்ச்சி நுட்பமும் ஒப்பிட முடியாத இன்பதைதப் பெற்றுவிடமுடியும்.



எவர் மரங்களை உற்றுக் கேட்க கற்றுக் கொண்டாரோ அவர் ஒரு மரமாக இனியும் இருக்க விரும்பமாட்டார். அவர் என்னவாக இருக்கிறாரோ அதைவிட்டு இன்னொருவராக இருக்க விரும்பமாட்டார். அதுதான் வீடு. அதுதான் இன்பம்.

0 comments: