Saturday, May 15, 2010

க.நா.சுப்பிரமணியம் 31.01.1912 - 16.12.1988

சென்னை மாநகரத்தில் கடந்த நாற்பது ஆண்டுகளாக இலக்கிய சிந்தனை என்ற அமைப்பு செயற்பட்டு வருகின்றது. மாதந்தோறும் ஒரு கூட்டம் நடைபெறும். அந்த மாதத்தில், அதற்கு முந்தைய மாதத்தில் இலக்கியப் பத்திரிகைகளில் வெளிவந்த சிறுகதைகளிலிருந்து இலக்கியத்தில் தேர்ச்சி பெற்ற ஒருவர் சிறந்த ஒன்றை தேர்ந்தெடுப்பார். அந்த சிறுகதையின் சிறப்புக்களை எடுத்துச் சொல்லுவார். இப்படி ஒரு ஆண்டில் தேர்ந்து எடுக்கப்பட்ட பன்னிரண்டு சிறுகதைகளில் இருந்து ஆண்டின் சிறுகதை என்று ஒன்று தேர்ந்தெடுக்கப்படும். இராசேசுவரி கல்யாண மண்டபத்தில் தமிழ்ப் புத்தாண்டில் விழா நடத்துவார்கள். அந்த விழாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட பன்னிரண்டு சிறுகதைகள் நூலாக வெளியிடப்படும். அதோடுமட்டுமல்ல தமிழர் அல்லாத தலைசிறந்த எழுத்தாளர் அல்லது அறிஞர் தலைமையுரை ஆற்ற அழைக்கப்படுவார். இந்த நாற்பது ஆண்டுகளில் தலைமையுரை ஆற்றியவர்கள் சிவராம் கரந்து, குஷ்வந்த சிங் இப்படிப் பல சாதனையாளர்கள் சொற்பொழிவு ஆற்றியுள்ளனர். தமிழ் எழுத்தாளரைப்பற்றி ஓர் அறிமுக நூல் ஒன்று எழுதிவிக்கப்பட்டு வெளியிடப்படும். பிச்சமூர்த்தி ( சுந்தர ராமசாமி ) மௌனியுடன் கொஞ்ச தூரம் ( திலீப் குமார் ), சி.சு .செல்லப்பா இப்படி மறைந்த எழுத்தாளர்கள் பற்றி நூல்களாக வெளியிட்டுள்ளது. இவ்வாண்டிற்காக க.நா.சுப்பிரமணியம் அவர்களைப் பற்றி என்னை எழுதும்படி கேட்டுக்கொண்டார்கள். அப்புத்தகம் 16 ம் திகதி வெளியிடப்பட்டபோது நான் ஆற்றிய உரை.
"எழுதிக் கொண்டேயிருந்த க.நா.சுப்பிரமணியம்" முதல் பிரதியை அமுதசுரபி ஆசிரியர் பெற்றுக்கொண்டார்.



இவர் மறைந்துபோய் இருபதாண்டுகள் கழிந்துவிட்டன. இந்தத் தலைமுறை எழுத்தாளர்கள் க.நா.சு வை தெரிந்திருக்கிறார்களா, படித்திருத்திருக்கிறார்களா என்பது பற்றி எனக்குத் தெரியாது. இன்றைய எழுத்தாளர்களில் சிலரை, நான் அவ்வப்போது சந்திப்பதுண்டு. இவர்கள் தமிழ் இலக்கியத்தில் சாதனை படைத்து, ஆனால் விளம்பரப்படுத்தபடாத எழுத்தாளர்களின் படைப்புகளை படித்ததே இல்லை என்றும் பெருமை கொள்கிறார்கள். இந்தக் காலகட்டத்தில் தமிழ் இலக்கியத்தில் சாதனை படைத்த க.நா.சு வைப்பற்றி எழுதும்படி என்னைக் கேட்டுக்கொண்ட இலக்கிய சிந்தனை அமைப்புக்கு நன்றி சொல்வது என் கடமையாகும். 2012 ஆண்டு அவர் பிறந்து நூற்றாண்டுகள் நிறைவடைகின்றன. அவரின் படைப்புகள் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தமிழக அரசால் நாட்டுடமையாக்கப்பட்டன. அவர் தமிழில் எழுதிய படைப்புகள் - நாவல், சிறுகதை, மொழிபெயர்ப்புகள் இன்ன பிற செம்பதிப்புகளாக கொண்டுவரப்படவேண்டும். அச்சில் வெளிவந்தவை ஐயாயிரம் பக்கங்களுக்கு மேல் இருக்கும். இன்னும் கையெழுத்துப் பிரதிகளாகவே அச்சில் வெளிவராதவை பத்தாயிரம் பக்கங்களுக்கு மேல் இருக்கும். அவர் ஆங்கிலத்தில் எழுதியவைகளையும் வெளியிட்டால் அதுவும் ஐயாயிரம் பக்கங்களுக்கு வரும். அந்தக் காலத்தில் இந்து பத்திரிகையிலும் வேறு பல பத்திரிகைகளிலும் அவர் எழுதிய நூல் மதிப்புரைகளை கட்டுரைகளாகத் தொகுத்து வெளியிட்டாலும் அதுவும் பல ஆயிரம் பக்கங்கள் வரும். இப்படி இவர் எழுதியவைகளின் அளவைக்கொண்டுதான் எழுதிக்கொண்டேயிருந்த க.நா.சு என்ற தலைப்பில் நான் எழுதிய நூல் வெளியிடப்படுகிறது. நான் முதலில் க.நா.சு என்றுதான் நூலின் தலைப்பாகக் கொடுத்திருந்தேன். என் கையெழுத்துப் பிரதியைப் படித்த திரு லெட்சுமணன் அவர்கள் எழுதிக்கொண்டேயிருந்த என்ற அடைமொழியைக் கொடுத்தார். மிகவும் பொருத்தமான அடைமொழி. எனக்குப் பெரு மகிழ்ச்சி. ஆக புத்தகத்தின் தலைப்பை மிகப் பொருத்தமாக அமைத்த பெருமை அவரையே சார்ந்தது. அவருக்கும் என் நன்றியைச் சொல்லிக் கொள்கிறேன்.

இந்நூல் அறிமுக நூல் க.நா.சு என்னும் பிரமாண்டமான அரண்மனையின் உள்ளே செல்ல மக்களை வரவேற்கும் ஒரு நுழைவாயில். க.நா.சு என்கிற இலக்கிய ஆசிரியர் தமிழர் என்பது நாம் எல்லோரும் பெருமைப் படக்கூடிய விடயம். நம் தமிழ் சமுதாயத்தில் எந்தத் துறையிலும் தனிமனித வழிபாடு நோயாகப் பரவிவிட்டிருக்கிறது. அதனால் நாம் போற்றப்படவேண்டியவர்களைப் போற்றாமலே போய்விடுவதால், அவர்களின் சாதனைகள் நமக்குத் தெரியாமலே போய்விடுகின்றன. க.நா.சு தன் வாழ்நாள் முழுவதும் இலக்கியத்தில் நாவல், சிறுகதை என்பவை வெறும் கதைகள் அல்ல பொழுது போக்குவதற்கானவை அல்ல. அவை வாழ்க்கையப் பற்றிய தத்துவக் கண்ணோட்டத்தைக் கொண்டிருப்பவை என்று வற்புறுத்திக் கொண்டேயிருந்தார். சாதனைகளைப் போற்றுவது என்பது வளர்ச்சிக்கான உரம். க.நா.சு உயிரோடு இருக்கும் போதும் சரி, இறந்தபோதும் சரி, அவருக்கு என்று எந்த நிறுவன பலமும் கிடையாது. ஏனெனில் அவர் அப்படி ஒரு சுதந்திர மனிதனாக வாழ்ந்தார். அவரது படைப்புகள் செம்பதிப்பாக வெளிவருவது தமிழ் இலக்கியம் வளர்வதற்கும் வளமை பெறுவதற்கும் அத்தியாவசியமானதாகும்.

எல்லோருக்கும் வணக்கம். மீண்டும் உங்கள் அனைவருக்கும் நன்றி. நன்றி

0 comments: