இந்திய கைவினைப்பொருள்கள் கண்காட்சிகளுக்கு நான் போகும் பழக்கம் உடையவன். இந்திய பாரம்பரியக் கலைகள் - சிற்பம், ஓவியம், கைத்தறி ஆகியவை இன்னும் உயிரோடு இருக்கின்றன என்பதற்கு கண்காட்சிகள் சாட்சியங்களாய் திகழ்கின்றன. இந்தக் கலைஞர்கள் பட்டம் வழங்கும் பள்ளிகளிலோ, கல்லூரிகளிலோ பயின்றவர்கள் அல்லர், ஒவ்வொரு கண்காட்சியும் ஒரு மியூசியம் - அரும் பொருட்காட்சியகம். இதில் நான் தேடிப்போவது சிற்றோவியங்கள், பலையோலை ஓவியங்கள், மதுபானி ஓவியங்கள். இவற்றில் குறைந்தவிலையில் கிடைப்பதை வாங்குவேன். அதாவது ஒன்றின் விலை 100 ரூபா இருக்கவேண்டும். இந்த விலைக்கே ஒன்றோ இரண்டோ கிடைக்கும். சிலவேளைகளில் கிடைக்காது. சிலவற்றின் விலை 200 இல் இருந்து 800 ரூபா வரை இருக்கும். இந்த விலை அதிகம் என்றும் கூறமாட்டேன். ஓவியங்கள் அச்சடித்த காலன்டர்கள் விலைக்கோ அல்லது இலவசமாகவோ கிடைக்கும். பம்பாயில் வக்கில் என்ற நிறுவனம் இந்திய சிற்றோவியங்கள் அச்சடித்த காலண்டர்கள், திருமண அழைப்பிதழ்கள் வாழ்த்து அட்டைகள் ஆகியவற்றை வெளியிடும். அவற்றை தேர்ந்தெடுத்து வாங்கி சேர்த்திருக்கிறேன். இவை மஞ்சுவந்தத்தில் வெளிவரும்.
ஒரிசா மாநிலத்தில் பனையோலையில் ஓவியம் தீட்டும் கலை நெடுங்காலமாக இருந்து வருகிறது. முன்பெல்லாம் இயற்கைப் பொருள்களில் இருந்து ஒவியத்திற்கான வண்ணங்களைத் தயாரித்து உபயோகித்தனர். இப்போது தொழிற்சாலைகள் தயாரிக்கும் வண்ணங்களைத்தான் உபயோகிக்க வேண்டியிருக்கிறது காரணம் இயற்கைப் பொருளில் இருந்து வண்ணங்கள் தயாரிப்பது கூடுதல் செலவாகவும் அதிகமான காலமும் ஆகிறதாம். இந்தக் கண்காட்சியில் கலைஞர்களே விற்பனையாளர்கள் ஒரு சில ஓவியர்களுடன் எனக்கு நட்பு ஏற்பட்டது. அவர்களுக்கு வாழ்க்கை பெரும் போராட்டமாக இருக்கிறது. இளம் தலைமுறையினர் இக்கலையைக் கற்க ஆர்வம் காட்டுவதில்லை. பெரும்பாலும் இக்கண்காட்சிகள் சென்னை, மும்பை, கல்கத்தா, டெல்லி போன்ற பெருநகரங்களில் நடைபெற்றாலும் விற்பனை ஓகோ என்று சொல்லும்படி இல்லையாம்.
சென்னையில் சுவரொட்டிகளுக்கா செலவளிக்கப்படுவது எத்தனை கோடி ரூபா! அரசியல் தலைவர்கள், திரைப்பட நடிகர்கள், நடிகைகள் சுவரொட்டிகளில் உலா வருகின்றனர்.
இங்கு இரண்டு ஓவியங்களை வெளியிட்டிருக்கிறேன். ஒவ்வொரு ஓவியத்தின் நீளம் 6 அங்குலம் அகலம் 1 அங்குலத்திற்கும் குறைவு. இந்த மிகச் சிறியபரப்பில் எத்தனை உருவங்கள்! எத்தனை வண்ணங்கள் !