Saturday, April 17, 2010

அடையாறு அத்தை

ருக்மணிதேவி"

சென்னை மாநகரில் அடையாறு என்ற பகுதியில் உலகப் புகழ் பெற்ற மூன்று நிறுவனங்கள் உள்ளன. எனக்குத் தெரிந்த – 30 ஆண்டுகளுக்கு முன்பிருந்த அடையாறு மிகவும் அழகாகயிருந்ததது. அதன் கிராமத்தின் அடையாளம் அடியோடு அழிக்கப்படாமல்தான் இருந்தது. இப்போது சென்னை கான்கிறீட் அடுக்குக் கட் டிடங்களின் காடாக அகன்றும் உயர வளர்ந்தும் கொண்டே இருக்கிறது.




  1. பிரம்ம ஞான சபைஅல்லது தியோசிபிக்கல் சொசைட்டி


  2. கலாஷேத்ரம்


  3. கிருஷ்ணமூர்த்தி பவுண்டேசன்


தமிழ்நாட்டு பாரம்பரியக் கலைகள் அழியாமல் இருக்கும் பொருட்டு - சிறப்பாக நாட்டியமும் சங்கீதமும் - ருக்மணி தேவி என்பவர் கலாஷேத்ரத்தை நிறுவினார் இவர் பிறந்த நாளை நான்கு ஆண்டுகளுக்கு ஒரு தடவைதான் கொண்டாட முடியும். ஏனென்றால் அவர் பிப்பரவரி 29 இல் பிறந்தவர்.

நான் அவரை முதன் முதலாகப் பார்த்தபோது அவருக்கு 60 வயதிருந்திருக்கும் . அந்த வயதிலும் அவர் அழகாகயிருந்தார். கலாஷேத்ராவில் ஆண்டு தோறும் கலைவிழா நடக்கும்.புதிய நாட்டிய நாடகங்கள் அரங்கேற்றப்படும். நான் பலவற்றை பார்த்திருக்கிறேன் . நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு கலாஷேத்ரத்தைச் சுற்றி அங்கொன்றும் இங்கொன்றுமாக பங்களாக்கள் இருந்தன. அந்த இடத்தில் இருந்தபடியே கொஞ்ச தூரத்தில் இருக்கும் கடல் அலைகளின் இரைச்சலைக் கேட்கலாம். மணல் மேடுகள் இருக்கும். கலாஷேத்ரத்திற்கு அருகே பாம்பன் சுவாமிகள் சமாதியும் மடமும் இருக்கின்றன. இங்கே பௌர்ணமி நாளன்று ஏராளமான பக்தர்கள் கூடுவார்கள். எப்போதும் அமைதி தழுவும் இடமாக இருந்தது. கலாஷேத்ரத்தில் ஓலை வேய்ந்த குடில்கள் இருந்தன. அங்கேதான் மாணாக்கர்களுக்கு பரதநாட்டியமும் சங்கீதமும் கற்றுத் தரப்பட்டன. கலாஷேத்ர வளாகத்தில் உ.வே.சாமிநாதையர் நூல் நிலையம் இருக்கிறது. கலாஷேத்ரத்தின் குடில்களில் ஒன்றில்தான் புகழ் பெற்ற எழுத்தாளர் வெ.சாமிநாத சர்மா தன் இறுதிக் காலத்தைக் கழித்தார். அவர் கண் தெரியாமல், காது கேளாமல் இருந்தபோதுதான் அவரை இரண்டோ மூன்று தடவைகள் சந்தித்திருக்கிறேன். அங்கே நெசவு கற்றுத் தரப்படுகிறது. துணிக்கு இயற்கைச் சாயம் தயாரிப்பதும் சொல்லித்தரப்படுகிறது. இதன் அருகேதான் கோவிலூர் மடாலயத்தின் இன்றைய தலைமை பீடாதிபதி நாச்சியப்பன் வாழ்ந்து வருகிறார். இவர் தன் 72வது வயதில்தான் பீடாதிபதியானார். அதற்கு முன்பு அவர் போட்டோகிராபராக இருந்தார். செர்மானியில் போட்டோ பிளாக் செய்வதில் பயிற்சி பெற்று பெரும் சாதனை புரிந்தவர். இப்போது எண்பத்தி நான்கோ அல்லது எண்பத்திதேழோ வயதாகிறது. இவர் ஆயிரக்கணக்கில் ருக்மணிதேவியை படம் பிடித்திருக்கிறார் . தான் எடுத்த புகைப்படங்களை இரண்டு பெரிய புத்தகங்களாக வெளியிட்டிருக்கிறார் . அவர் எடுத்த புகைப்படங்களைப் பார்த்தலால் அவர் அழகு உபாசகர் என்பது தெரிகிறது. ருக்மணிதேவி அந்தக் காலத்தில் அவர் அழகிற்காக பெயரும் புகழும் பெற்றவர். அந்த அழகு காலத்தால் அழியாதபடி நாச்சியப்பன் போட்டோ எடுத்துள்ளார். கலாஷேத்ரத்தை நிறுவிய ருக்மணிதேவி பன்முக ஆளுமை உடையவர். பிரம்ம ஞான சபையின் மிக முக்கிய உறுப்பினராவார். பிராமணப் பெண்ணாக இருந்தாலும் தன்னைவிட இருபத்தைந்து வயது மூத்த வெள்ளைக்காரரான அருண்டேலை திரும்ணம் செய்துகொண்டு அந்த காலத்தில் ஐதீக வட்டாரத்தில் சலசலப்பை உண்டாக்கியவர் .தேவதாசிகள் தம் குலத்தொழிலாகக்கொண்டு ஆடிக்கொண்டிருந்த சதிர் ஆட்டத்தைக் கற்றுக்கொண்டு அதற்கு பரதநாட்டியம் என்று பெயர் சூட்டி அதை கலா விற்பன்னர்களும் பொதுமக்களும் போற்றும்படி மிக மரியாதைமிக்க கலையாக ஆக்கி, உலக அரங்கில் இடம் பிடித்துக்கொண்டவர். புலால் உண்ணாமையை ஒரு வேள்வியாக நடத்தி உலகமெங்கும் பிரச்சாரம் செய்தார். அதற்கு செயல் வடிவம் தருவதற்கு உலகமளாவிய நிறுவனத்தையும் கண்டார். விலங்குகளுக்கு உரிமைகள் உண்டு என்றும் அவற்றிக்காக போராடியவர்.


இன்றும் கலாஷேத்ரம் அவரின் புகழை பறைசாற்றிக்கொண்டிருக்கிறது.

சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்பு இன்று அழைக்கப்படும் பரதநாட்டியம், சதிர் ஆட்டம் என்றுதான் அன்று அறியப்பட்டதாகும் . இந்த ஆட்டத்தை தம் குலத் தொழிலாக ஆடி வந்தனர் தேவதாசிகள். இந்த தேவதாசிகள் கோயில்களிலும் செல்வந்தர்கள் வீடுகளிலும் ஆடிவந்தனர். உயரிய இலட்சியத்திற்காக தோற்றுவிக்கப்பட்ட இந்த அருங்கலை காலப்போக்கில் சீரழிந்து போயிற்று. இந்தக் கலையையும் சங்கீதத்தையும் காப்பாற்றிக்கொண்டுவந்த சமூகம் இசை வேளாளர் என்றும் அழைக்கப்பட்டது. சதிர் ஆட்டம் என்பதே ஏதோ காமக்களியாட்டம் என்று அவப்பெயரில் சிக்கிக்கொண்டிருந்தது. அந்த நிலையில் உள்ள இந்தக் கலையை ருக்மணிதேவி கற்றுக்கொண்டார் 'பாப்பாத்தி சதிர் ஆட்டத்தையும் எடுத்துக்கொண்டுவிட்டாள்' என்று அந்தக் காலத்தில் பிராமணர் அல்லாதவர்கள் பேசினதை என் காதால் கேட்டதுண்டு. ருக்மணிதேவி இந்தக் கண்டனங்களைப் பொருட்படுத்தவில்லை அவருக்கு உறுதுணையாக இருந்தவர் அவருடைய வெள்ளைக்காரக் கணவர் அருண்டேல். நானும் என் புத்தி தெரியாத வயதில் காஞ்சிபுரத்தில் உள்ள வரகுவாசல் தெருவில் உள்ள ஒரு வீட்டில் சதிர் ஆட்டத்தைப் பார்த்திருக்கிறேன். சதிர் ஆட்டத்தில் சிருங்கார ரசம்தான் அதிகமாக இருந்தது. ருக்மணிதேவி சிருங்காரத்தை எடுத்துவிட்டு, பக்தி ரசத்திற்கு மட்டுமே இடங்கொடுத்தார் . இந்த மாற்றத்தை பாலசரஸ்வதி என்ற புகழ் பெற்ற பரதநாட்டிய கலைஞரும் எதிர்த்தார் . என் இருபதாவது வயதில் அவர் ஆடிய ஆட்டத்தைப் பார்த்திருக்கிறேன். அப்போது அவருக்கு நாற்பது வயதிற்கு மேல் இருக்கும். பார்ப்பதற்கும் அழகு என்று சொல்லமுடியாது. அவர் ஆடிய பரதநாட்டியம் பார்ப்போரைப் பிரமிக்கச் செய்தது. என்ன அழகு! எனக்கு பரதநாட்டியம் பற்றி ஒன்றும் தெரியாது. அப்போது தெரிந்து கொண்டேன் கலைக்கு என்று தனித்த அழகு இருக்கிறது அதை வெகு சிலரே வெளிக்கொண்டுவரக்கூடிய அற்புதக் கலைஞர்காக இருக்கிறார்கள். அந்த அற்புதக் கலைஞர்களில் ஒருவர்தான் பாலசரஸ்வதி. ரசிகமணி டி.கே.சி பாலசரஸ்வதிக்கு, அவர் பரதநாட்டியத்தைப்பற்றி போகும் இடம் எல்லாம் பேசிப் பேசிப் புகழ் சேர்த்தார்.

பாலசரஸ்வதிபாலசரஸ்வதியும் ருக்மணிதேவியும் பரதநாட்டியத்தை உயர்ந்த நிலைக்கு கொண்டுபோனவர்கள். ஆனாலும் இருவருக்கிடையிலும் ஒரு பனிப்போர் இருந்தது. ருக்மணிதேவியால்தான் சமுதாயத்தின் மேல்தட்டுக் குடும்பப் பெண்களும் இந்த நாட்டியத்தைக் கற்கத் தொடங்கினர். சதிர் ஆட்டத்திற்கு பரதநாட்டியம் என்று பெயர் மாற்றம் செய்து முதல் புரட்சியை செய்தார். அதில் இருந்த சிருங்கார ரசத்தை அகற்றிவிட்டு பக்தி ரசனைக்கு இடம் கொடுத்து இரண்டாவது புரட்சிகரமான மாற்றைத்தைச் செய்தார். அரங்க மேடையில் ஆடல்வல்லான் அதாவது நடராஜனின் சிலையை வைத்து, அதற்கு வணக்கம் செலுத்திவிட்டு நாட்டியம் தொடங்கவேண்டும் என்ற சம்பிரதாயத்தை உண்டாக்கியவர் ருக்மணிதேவி. இது மூன்றாவது புரட்சிகரமான மாற்றமாகும். அதற்கும் எதிர்ப்பு இருந்தது. நான்காவது புரட்சிகரமான மாற்றம் என்னவென்றால் அந்தக்காலத்தில் நட்டுவாங்கம் ஆண்களே செய்து வந்தார்கள். பெண்களும் நட்டுவாங்கம் செய்யலாம் என்பதை அறிமுகப்படுத்தினார் ருக்மணிதேவி. ஆக நட்டுவாங்கம் செய்த முதல் பெண்மணி கலாராணி. இவர் இப்பள்ளியில் மாணவியாக இருந்து அங்கேயே ஆசிரியராகவும் ஆனவர். இவர் ருக்மணிதேவி அம்மையாரைப்பற்றி வாழ்க்கை வரலாறு எழுதியிருக்கிறார். இன்னொரு புரட்சிகரமான மாற்றத்தையும் ருக்மணிதேவி செய்தார். அந்தக்காலத்தில் நாட்டியம் ஆடுபவர்களைச் சுற்றி பக்கவாத்தியக் காரர்கள் சுற்றி சுற்றி ஓடி இசைக்கருவிகளை வாசிப்பார்கள். இந்த வழக்கத்தை மாற்றி பக்கவாத்தியக்காரர்கள் மேடையின் வலப்பக்கத்தில் அவையோர்களுக்குத் தெரியும்படி அமரச் செய்தார். ஆக ருக்மணிதேவி தன் வாழ்க்கையை எதிர்பிலேயே வளர்த்து வந்தவர். அவரை கலாஷேத்ராவில் பணி புரிபவர்கள் அத்தை என்றே அழைப்பார்கள். தேவியுடன் நெருக்கமாக இருந்தவர்கள் சிலரை எனக்கு நன்றாகத் தெரியும். அவர்கள் சொல்வதைக் கேட்டிருக்கிறேன்.
'அவளா மகா திமிர் பிடித்தவளாயிற்றே!' அன்று இந்தியாவின் பிரதமராகவிருந்த நேருவுடன் எந்த நேரத்திலும் நேரடியாகப் பேசக்கூடியவராக ருக்மணிதேவி இருந்திருக்கிறார். நேரு உயிரோடு இருக்கும்வரை இந்தியாவின் கலைத்தூதுவராக பல நாடுகளுக்குச் சென்றிருக்கிறார் அவரின் நாட்டியக்குழு கலா நிகழ்ச்சி நடத்தாத நாடே இல்லை என்று சொல்லாம். அவர் தன் குழுவின் நாடக நாட்டியங்களை வடிவமைத்தவர். இவரின் படைப்பாற்றலைப்பற்றி நன்றாகவே பலர் எழுதியிருக்கின்றனர். ஆண்டில் சென்னையில் மூன்று மாதங்களுக்கு மேல் இருக்கமாட்டார், வெளிநாட்டுப்பயணம்தான். சென்னையில் ஆண்டுதோறும் டிசம்பர் ஜனவரி மாதங்களில் ஜெ.கிருஷ்ணமூர்த்தி வசந்தவிஹாரில் சொற்பொழிவு ஆற்றுவார். நான் 1960 இல் இருந்து 86 வரையில் ஜெ.கிருஷ்ணமூர்த்தியின் சொற்பொழிவுகளைக் கேட்டிருக்கிறேன். அப்போது ருக்மணிதேவி அவர் பேசும் மேடைக்கு அருகில் நாற்காலியில் உட்காந்தபடி கேட்டுக்கொண்டிருந்ததைப் பார்த்திருக்கிறேன். இதை ஏன் சொல்கிறேன் என்றால் ஜெ.கிருஷ்ணமூர்த்தி புகழின் உச்சக்கட்டத்தில் இருந்தபோது 'நான் உலகை உய்விக்க வந்த மஹான் அல்ல! உண்மைக்கு போவதற்குப் பாதை ஒன்றுமில்லை; நான் எவருக்கும் குருவும் அல்ல; அதேசமயம் எனக்கும் யாரும் சீடனுமல்ல' என்று தியோசிபிக்கல் சொசைட்டியைவிட்டு வெளியேறிவிட்டார். தனக்கு என்று ஹாலந்து நாட்டில் கொடுத்த 5000 ஏக்கர்களும் அரண்மனை போன்ற மாளிகையும் பல நாடுகளில் உள்ள ஆயிரக்கணக்கான தன் சீடர்களை விட்டு வெளியேறினார். அப்போது சென்னையில் உள்ள இந்த சங்கத்தின் அறிவாளிகள் தங்களை ஜெ.கிருஷ்ணமூர்த்தி முதுகில் குத்திவிட்டார், அவமானப்படுத்திவிட்டார் என்று கொதித்து எழுந்தனர். அப்படிக் கொதித்து எழுந்தவர்களில் ருக்மணிதேவி தேவியும் ஒருவர். அப்போது அந்த சொசைட்டியில் ஜெ.கிருஷ்ணமூர்த்திக்கு என்று இருந்த அறையில் உள்ள அவருடைய பொருள்களையெல்லாம் எடுத்து தெருவில் எறிந்தவர்களில் ருக்மணிதேவியும் ஒருவர். காலம் மாறிற்று, தேவியார் பணிந்தார், ஜெ.கிருஷ்ணமூர்த்திக்கு மட்டுமே ருக்மணிதேவி தலைவணங்கினார்.

உ.வே.சாமிநாதையர் - அதாவது தமிழ்த்தாத்தா - பதிப்பு செம்மல் சேர்த்து வைத்திருந்த பழைய புத்தகங்கள் ஓலைச்சுவடிகள் ஆகியவற்றை எங்கே கொண்டு வைத்துக் காப்பாற்றுவது என்று அவரின் வாரிசுகள் திண்டாடிக்கொண்டிருந்தபோது, ருக்மணிதேவி தம் பள்ளியின் வளாகத்தில் கட்டிடம் கட்டிக்கொண்டு ஒரு நூல் நிலையம் அமைத்திடவும் உதவினார். ருக்மணிதேவியின் உதவியால்தான் வெ.சாமிநாதசர்மா தன் வாழ்க்கையின் இறுதிக்காலத்தை இங்கு கழித்தார். ருக்மணிதேவியை இந்தியக் குடியரசுத் தலைவராக்க முயற்சி எடுக்கப்பட்டது. அவர் டில்லி நாடாளுமன்றத்தின் மேலவை உறுப்பினராக ஒன்றோ இரண்டு தடவை குடியரசுத் தலைவரால் நியமனம் பெற்றிருந்தார். குடியரசுத்தலைவராக வந்தால் அவர் எந்த அரசியல் கட்சியின் தலையீட்டையும் ஏற்றுக்கொள்ளமாட்டர் என்ற கருத்து - எல்லா அரசியல் கட்சிகளும் ஒருமித்த எண்ணம் கொண்டிருந்ததில் வியப்பில்லை - அவரை ஒதுக்கிவிட்டனர்.

இத்தனை சாதனைகள் புரிந்தபோதிலும் ருக்மணிதேவிக்கு அவரின் இறுதி ஆண்டுகள் வருத்தம் நிறைந்ததாகவே இருந்தது. தனக்கு என்று தலையாட்டிக்கூட்டத்தை ஏற்படுத்திக்கொண்டதில்லை. தனித்தே இருந்து செயற்பட்டார். உலகளாவிய புகழும் பெரும் சொத்துக்களைக் கொண்ட கலாஷேத்ர நிறுவத்தை கபளீகரம் செய்து தம் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள தன் உடனே இருந்தவர்கள் முயற்சி செய்ததைக் கண்ட ருக்மணிதேவிக்கு வருத்தம் ஏற்பட்டது. அவருக்கு நிறுவத்தின் எதிர்காலத்தைப்பற்றி கவலை இருந்தது. தான் இறந்தபின்பு இந்திய அரசு கலாஷேத்ரத்தை தன் நிர்வாகத்திற்குள் வைத்துக்கொள்ள வேண்டும்படியாக உயில் எழுதிவைத்துவிட்டார். இந்த உயிலை மிகவும் ரகசியமாக வைத்திருந்தார் என்று சொல்லப்படுகிறது. இப்போது கலாஷேத்ரம் இந்திய அரசின் நேரடி நிர்வாகத்தில் இருக்கிறது.

0 comments: